இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது t20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கயானாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மேற்கிந்திய அணியின் தொடக்க வீரர்களாக லீவிஸ், சுனில் நரேன் களமிறங்கினர். சுனில் நரேன் 2 ரன்களிலும் லீவிஸ் 10 ரன்களிலும் ஹெட்மெயர் 1 ரன்களில் வெளியேறினர்.

இதன்பின் பொல்லார்டுடன் பூரன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் அரைசதம் அடித்த பொல்லார்ட் 58 ரன்களில் சைனி பந்தில் அவுட் ஆனார் . அதன்பின் களமிறங்கிய பவுல் அதிரடியாக 20 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார் . முடிவில் இந்திய அணிக்கு 147 ரன்களை வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், சைனி 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டும் எடுத்தனர் .
இதனைத் தொடர்ந்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது . இந்தியாவின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் தவான் களம் இறங்கினர் . ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 1.6வது ஓவரில் தாமஸ் வீசிய பந்தில் தவான் 3(5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார்.
இந்நிலையில் ராகுல், கோலி இருவரும் ஜோடி சேர்ந்தனர். பின்னர் 4.4வது ஓவரில் ராகுல் 20(18) ரன்கள் எடுத்து அவுட்டானார். அதனை தொடர்ந்து ரிஷப் பந்த் களமிறங்கினர். கோலியும் பண்டும் இணைந்து ரன்களை வெகுவாக குவிக்க துவங்கினர். இந்திய அணியின் கேப்டன் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பின் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அணியின் கேப்டன் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார் தாமஸ்.
பின்னர் பாண்டிய களமிறங்கினர் . அதனைத்தொடர்ந்து ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இறுதியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் .இறுதியில் 19.1 வது ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது இந்திய அணி . இதன்மூலம் இந்திய அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது . இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக ரிஷப் பந்த் 65 (45) ரன்களும், கேப்டன் கோலி 59 (45) ரன்கள் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் தாமஸ் 2 விக்கெட்டும், ஆலன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரையும் முழுமையாக வென்றது.