இந்தியாவிலும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் – இதுவரை 195 பேர் பாதிப்பு, 4 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 173ஆக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 195ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனையடுத்து அந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 195ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள. அதில் 163 இந்தியர்கள், 32 வெளிநாட்டினருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில வாரிய கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரவங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில்,

கேரளா – 26 (வெளிநாட்டினர் – 2), மகாராஷ்டிரா- 44 (வெளிநாட்டினர் – 3), உ.பி.-18 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 16 (வெளிநாட்டினர் – 1), கர்நாடகா – 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் – 10, ராஜஸ்தான் – 5 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 7 (வெளிநாட்டினர் – 9), தமிழ்நாடு – 3, ஜம்மு & காஷ்மீர் – 4, பஞ்சாப் -2, ஹரியானா – 3, (வெளிநாட்டினர் -14), ஆந்திரா – 2, ஒடிஷா – 1, உத்தரகண்ட் – 1, பெங்கால் – 1, பாண்டிச்சேரி – 1, சண்டிகர் – 1, சத்தீஸ்கர் – 1, குஜராத் – 2 என மொத்தம் 147 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவரை 20 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 47 பேரும், கேரளத்தில் 28 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வைரஸ் பாதிப்பால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து நேற்று மாலை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இதுபோன்ற நெருக்கடியான சூழலை உலகம் இதற்கு முன்பு எதிா்கொண்டதில்லை. உலகப் போா் நடைபெற்ற காலங்களில்கூட உலக நாடுகள் இந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை என குறிப்பிட்டார். வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.