வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை… எங்களுக்கு முன்கூட்டியே தகவல் இல்லை… கரூர் எஸ் பி தகவல் ‌..!!!!!!

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் வெளியாகவில்லை. இந்நிலையில் கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெற்ற இடத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் திமுக தொண்டர்களில் ஒருவரை வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து பாதுகாப்பு கருதி வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் கரூரில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை குறித்து முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்கவில்லை என கரூர் எஸ் பி சுந்தரவர்தன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, சோதனைக்கு முன்பு வருமானவரித்துறையினர் பாதுகாப்பு கேட்பது வழக்கம். அதேபோல் வருமானவரித்துறை அதிகாரிகள்  சி ஆர் பி எப் வீரர்களையும் அழைத்து வரவில்லை. எங்களுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். மேலும் வருமான வரி சோதனை நடக்கும் ஒன்பது இடங்களில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.