சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் நிகழும்’! – எம்.எல்.ஏ. தனியரசு

சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா எடுக்கும் முடிவு அதிமுகவில் பெரிய தாக்கமும் மாற்றமும் நிகழலாம் என எம்.எல்.ஏ. தனியரசு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திருப்பூர் தெற்கு, வடக்கு பல்லடம், காங்கேயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு செய்தியாளர்களிடம் பேசுகையில்,”இன்று நடந்த வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் காங்கேயம் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் உலகப் புகழ்பெற்ற காளை இனங்களில் ஒன்றான காங்கேயம் காளையை குறிக்கும் வண்ணம் காங்கேயம் பகுதியில் காங்கேயம் காளையின் உருவ சிலையை நிறுவ வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் வெளியே வரவேண்டும் என்பது அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா அரசியலில் எடுக்கும் முடிவு அதிமுகவில் பெரிய தாக்கத்துடன் மாற்றத்தை நிகழ்த்துவதாக அமையும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசிடமும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம், அரசு இதனை பரிசீலித்து வருகிறது. அரசை பொறுத்தவரை இதனை முற்றிலும் நிராகரிக்கவும் இல்லை, முற்றிலும் ஆதரிக்கவும் இல்லை. இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அவசியமில்லாதது. பாஜக இதனை உள்நோக்கத்தோடு கொண்டுவந்து மக்களை மத ரீதியாக பிரிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது. மக்களை மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் இனத்தின் பெயராலும் பிரிப்பது என்பது சூழ்ச்சி அரசியல், துரோக அரசியல், சதி. எனவே அதிமுக அரசு இதனை நிராகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தக்கூடாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *