பருவநிலை மாற்றத்தால் ஐஸ்லாந்தில் முற்றிலும் பனிப்பாறை உருகியதால் அப்பகுதி மக்களும், விஞ்ஞானிகளும் இணைந்து துக்கம் அனுசரித்தனர்.
ஐஸ்லாந்து நாட்டின் பல்வேறு பனிப்பாறைகள் வெப்பமயமாதலால் உருகி வருகின்றது. முன்னதாக ஓகேஜோகுல் என்ற பிரம்மாண்ட பெரிய பனிப்பாறையும் 20-ம் நூற்றாண்டு முதல் உருகி வந்தது. 1986-ம் ஆண்டு செயற்கைகோள் உதவியுடன் எடுக்கப்பட்ட படத்தில், பிரம்மாண்ட பனிப்பாறையாக காட்சியளித்த ஓகேஜோகுல் தற்போது முற்றிலும் உருகிய நிலையில், இந்தாண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிறு சிறு திட்டுகளாக காட்சியளிக்கின்றது.

இந்நிலையில் முற்றிலும் உருகிய முதல் பனிப்பாறைக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் ஓகேஜோகுல் இருந்த இடத்தில் கூடினர். மேலும் அவர்கள் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை எச்சரிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய உலோக தகட்டை, அங்கிருந்த பாறைகளின் மேல் பதித்தனர்.