நீலகிரி மழை வெள்ளைத்தை முழுமையாக பார்வையிடாமல் பப்ளிசிட்டிக்காக அமைச்சர்கள் வந்து சென்றது கண்டனத்துக்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , நான் கடந்த இரண்டு நாட்களாக நேற்றும் , இன்றும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளை பார்வையிட்டு , முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்வது மட்டுமல்ல திமுக சார்பில் நிவாரணப் பொருட்களையும் வழங்கி உள்ளோம்.
தொடர் மழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுமார் 350 கிலோ மீட்டருக்கு சாலைகள் பழுதாகியுள்ளது. சுமார் 150 கிலோ மீட்டர் நான் சென்றேன்.ஏறக்குறைய 150 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.ஊட்டி , கூடலூர் , பந்தலூர் ஆகிய தாலுகாக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதை அரசு உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் , அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் ஏதோ பெயருக்கு ஓரிரு அமைச்சர்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அமைச்சர்களும் ஏதோ புகைப்படத்திற்கு அல்லது பத்திரிக்கைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காக , பப்ளிசிட்டிக்காக வந்துவிட்டு முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் பாதியில் சென்றது கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சி காலத்தில் இதே போல வெள்ளம் வந்த போது , மத்திய அமைச்சராக இருந்த இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற ராஜா அவர்கள் அப்போது மத்திய அரசின் துணையோடு தமிழகத்திலேயே கலைஞரின் ஆட்சி நடைபெற்ற காரணத்தால் அந்த ஆட்சியின் உடைய முழு ஒத்துழைப்போடு கூடலூர் முதல் மேட்டுப்பாளையம் வரை மழை நீர் வழித்தடங்கள் எல்லாம் சரி செய்து உரிய நடவடிக்கை எடுத்தார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.