2 வயது மகனின் கண்முன்னே… பீர் பாட்டிலால் குத்தி மனைவி கொடூர கொலை… சென்னையில் பரபரப்பு…!!

தன் மகன் கண்முன்னேயே மனைவியை கணவர் பீர் பாட்டிலால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் ரவி என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடிப்பழக்கம் உள்ள ரவிக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விஜலட்சுமி தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் தாய் வீட்டிற்கு சென்ற விஜயலட்சுமி திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருக்கும் நேரத்தில், வீட்டிற்கு வந்த ரவி தனது மாமனார் வெங்கடேசனை கல்லைக் கொண்டு அடித்து காயப்படுத்தி உள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு தன் மனைவியையும், 2  வயது மகனையும் அழைத்து சென்ற ரவி எருக்கஞ்சேரி பகுதி ரயில்வே சுரங்கப் பாதையில் வைத்து விஜயலட்சுமியிடம்  தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து அங்கிருந்த பீர் பாட்டிலால் தன் மனைவி விஜயலட்சுமியின் கழுத்திலும் வயிற்றுப் பகுதியிலும் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனைக் கண்டு அச்சத்தில் அலறிய குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு சம்பவ இடத்திற்கு  வந்த பொதுமக்கள் வியாசர்பாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இக்கொலையை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவான ரவியை வியாசர்பாடி காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ரவியின் மீது ஓட்டேரி, வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. 2 வயது மகன் கண் முன்னேயே தந்தை  தாயை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.