ரூ.6 1/2 கோடி மோசடி…. 9 பேர் மீது வழக்குபதிவு…. தம்பதியை கைது செய்த போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பபட்டியில் நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பூதிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தீபாவளிச்சிட்டு மற்றும் ஏலசீட்டு நடத்தி வந்துள்ளார். அவருக்கு அவரது மகள் சுகன்யா, மருமகன் பொன்ராஜ், உறவினர்களான தினேஷ், சரண்யா, பரமேஸ்வரி, சூர்யா உட்பட 8 பேர் உதவியாக இருந்துள்ளனர். அவர்களை நம்பி சமுத்திரப்பட்டி, பூதிபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஏலம் மற்றும் தீபாவளி சீட்டுகளில் சேர்ந்து பணம் செலுத்தினோம்.

அவர்கள் ஏலச்சீட்டு முடிந்த பிறகும் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. சுமார் 6 1/2 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் ஆறுமுகம் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று ஆறுமுகத்தின் மகள் மற்றும் மருமகனை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.