எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த கேழ்வரகு அடை செய்வது எப்படி!

கேழ்வரகு உடலுக்கு மிகவும் நல்லது. இதனை அடிக்கடி அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உடல் நன்கு பலம் அடையும். அதிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இதை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

ராகி மாவு – 200 கிராம்,
சிறிய வெங்காயம் – 1/2 கப்,
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய், உப்பு, தண்ணீர் – தேவையான அளவு,
முருங்கை கீரை – 1 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3.

செய்முறை :

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சீரகம், காய்ந்த மிளகாய், முருங்கை கீரை, சிறிய வெங்காயம், மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவை விட இலகுவான பதத்தில் பிசைந்து வைத்து கொள்ள வேண்டும். இதனுடன் வதக்கி வைத்துள்ளவற்றையும் சேர்ந்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். பின்னர் தோசைக் கல்லை சூடு செய்து, ராகி மாவை அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு : விருப்பப்பட்டால் கீரை, வெங்காயம் போற்றவற்றை வதக்காமலும் செய்யலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் இந்த முறையில் செய்து சாப்பிடுங்கள்.