எப்படி இருக்கு ? “நம்ம வீட்டுப் பிள்ளை” திரை விமர்சனம் ….!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம் எப்படி இருக்கின்றது.

நம்ம பல படங்களில் பார்த்து ரசித்த அண்ணன் , தங்கை பாசம் தான் ”நம்ம வீட்டு பிள்ளை” படத்தோட மையக்கரு. சிவகார்த்திகேயன் கிராமத்து இளைஞனாக தன்னுடைய வழக்கமான காதல் , காமெடி , ஆக்ஷன் என கலந்து கொடுத்திருக்கிறார். இயக்குனரின் நாயகனாக வந்து சென்டிமென்ட்டிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.அதை நிரூபிக்கும் விதமாக ஓப்பனிங் சாங் கூட இல்லாமல் இந்த முறை வித்தியாசமா அண்ணன் , தங்கை உறவை பற்றி ஆடிப்பாடி , பெண்கள் , குழந்தைகள் மத்தியில் மாஸ் காட்டியிருக்கிறார்.

அதே போல சண்டை காட்சியில் தன் கிட்ட அடி வாங்குனவர்களுக்கு வைத்தியம்  கொடுக்கும் போதும் , முறை பெண்ணோட காதலில் உரசும் போதும் , இடையில் மிமிக்ரி செஞ்சி கலாய்க்கும் போதும் தன்னுடைய இளம் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். ராஜேஷ் ஐஸ்வர்யா பாவடை தாவணியில் ஜாடிக்கேத்த மூடியாக கச்சிதமா பொருந்தி இருக்காங்க. அண்ணனோட துடுக்குத்தனமான விளையாடும் போதும் சரி , புகுந்த வீட்டில் அண்ணனுக்காக குரல் கொடுக்கும் போதும் சரி , பாசமலரா என் மனசுல நிக்கிறாங்க. பாரதிராஜா மூன்று தலைமுறை கண்ட நாட்டு வைத்தியரா நடித்து , தன்னுடைய வாரிசுகளுக்கு இடையில் பாலமாக வந்து பேரக் குழந்தைகளோடு கொஞ்சம் , உருகவும் செய்கிறார்கள்.

பிள்ளைகளை பெத்தவர்களின் நிலைமை இன்னைக்கு நகரம் முதல் கிராமம் வரை ஒன்றுதான் என்று வாரம் ஒரு வீட்டிலிருந்து வைத்தியம் பார்க்கிற பாரதிராஜாவுடன் கதாபாத்திரம் மூலமாக கூடுதலாக நமக்கு உணர வைத்திருக்கிறார் இயக்குனர். அனு இம்மானுவேல் சிவகார்த்திகேயனின் முறைப்பெண்னாக வாராங்க, கலெக்டருக்கு படிக்கின்றஅதேவேளையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூடியிருக்கிற உறவுக்கு மத்தியில் தன்னுடைய மாமன் மீதான காதலை வளர்த்து, தனது குறும்பு தனத்தால் ரசிகர்களை  ரசிக்க வைக்கிறார்.நட்டி நெகட்டிவ் ரோல்ல வந்தாலும் இன்னும் கொஞ்சம் மெரட்டி இருக்கலாம் .

இடைவேளையின்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி , அப்புறமா ஏமாற்றி இருக்கிறார் இயக்குனர். சூரி நாயகனுடைய அண்ணனாக வந்து கலகலப்புக்கு கை கொடுக்கிறார். அவருடைய மகனாக வருகின்ற இயக்குனர் பாண்டியராஜன் மகன் தன்னுடைய வயசுக்கு மீறி அடிக்கிற கவுண்டர் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. யோகி பாபு வக்கீலாக சிறிது நேரம் வந்தாலும் அவர் வருகிற காட்சிகளில் தன்னுடைய பங்குக்கு சிரிக்க வைக்கிறார். அர்ச்சனா , சமுத்திரகனி , சுப்பு ஆர்.கே சுரேஷ் , வேலா ராமமூர்த்தி , சண்முகசுந்தரம் இவங்க எல்லாம் மனசுல நிக்கறான். திரை முழுக்க நட்சத்திரங்களால் நிரம்பி வழிகின்ற இந்த திரைப்படத்தை கூடுமான வரைக்கும் தொகுத்து குழப்பமில்லாமல் தர முயற்சி பண்ணி இருக்காரு படத்தொகுப்பாளர் ரூபன்.

டி.இம்மானின்  பின்னணி இசையும் , பாடல்களும் படத்திற்கு பலம் , ஸ்ரேயா கோஷல் குரலில் ”மைலாஞ்சி பாடல்கள்” காதலோட மனசு வருடுது. “‘எங்க அண்ணன் பாடல்” அண்ணன் தங்கை உறவின் வலிமையை உணர்த்துகின்றது. “உன்கூட பொறக்கணும் பாடல்” அந்த உறவின் வலியை உணர்த்துகின்றது. சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் குரலில் ஒலிக்கின்ற “காந்த கண்ணழகி” பாடல் கமர்சியல் அட்ராக்ஷன். வீரசமர் உடைய கலையில் நீரவ்ஷா ஒளிப்பதிவு கதையின் தேவையை அறிந்து , மண்ணின் மனம் மாறாமல் , காட்சியை எளிமையாகவும், பிரம்மாண்டமாகவும் பதிவு செய்து கொடுத்துள்ளது.

முதல் காட்சியிலேயே பாரதிராஜா_வை வைத்து கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜ் போதும் போதும்னு சொல்ற அளவுக்கு கதாபாத்திரங்களை அடிக்கி யாருக்கு யார் என்ன உறவு என்பது திரைக்கதையின் போக்கில் மீறி நம்மை யோசிக்க வைக்கிறார். முதல் பாதியை சடங்கு , நிச்சயதார்த்தம் , திருமணம் , திருவிழா , பாடல்கள் என்று உறவுகளுக்குள்ள வருகின்ற நிகழ்வுகளை வைத்து காட்சிகளை கலகலப்பாக நகர்த்தி இருக்கிறார். அதேசமயம் வில்லனாக நடிக்கும் ”நட்டி”_க்கும் நாயகனான சிவாவுக்கும் பகை ஏற்படுவதற்கான காரணத்தை கொஞ்சம் வலுவாகவும் வைத்திருக்கலாம்.

படத்தின் பிற்பாதியில் பிளாஷ்பேக்கில் அண்ணன் தங்கை உறவுக்குள் புதைத்து இருக்கிற ரகசியத்தை உடைத்து ,  நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிற இயக்குனர் , அடுத்து நாயகனுடைய தந்தையின் மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை என்ற முடிச்சியை அவிழ்த்து  திரைக்கதையை நகர்த்த போகின்றார் என்று நாம் நினைக்கும் போது , நம்மை திசை திருப்பி வேற ரூட்டில் அழைச்சிட்டு போற கிளை கதைக்கு சென்டிமென்ட்டால் ஒரு முடிவை தந்து படத்தை நிறைவு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *