”அவர் அறிவாளி , சாதுரியம் மிக்கவர்” புகழ்ந்து அசிங்கப்படுத்திய அமலாக்கத்துறை…!!

ப.சிதம்பரம் அறிவாளி மற்றும் சாதுரியம் மிக்கவர் என்பதால் இது போன்ற சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட முடிந்தது என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. அதே போல அமலாக்கத்துறையினர் கைது செய்ய கூடாது என்ற முன்ஜாமீன் மனு மீதான விசாரணை  இன்று தொடங்கியது. நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததில் அமலாக்கத் துறை சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்த போது , சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு யார் அனுமதி வழங்கியது. இதன் மூலம் யார் யாரெல்லாம் ஆதாயம் பெற்றார்கள் என்று விசாரித்து வருகிறோம்.

சட்டவிரோத பரிமாற்றம் என்பது வெறும்  பொருளாதாரப் பிரச்சனை இல்லை. இந்திய இறையாண்மைக்கு எதிரானது. ஏனென்றால் சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சினைகள் உருவாவதற்கு இந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தான் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இதில் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் டிஜிட்டலாக இருப்பதால் இதன் முடிச்சுக்களை அவிழ்ப்பதில் சிரமமாக இருக்கின்றது.

சிதம்பரம் அவர்கள் சாதுரியம் மிக்கவர். மிகவும் படித்த அறிவாளி , அவரால் மட்டும்தான் இதுபோன்ற சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடமுடியும். அறிவு குறைவானவர்கள் இது போன்ற குற்றங்களைச் செய்ய முடியாது என்று நேரடியாகவே சிதம்பரத்தை தாக்கி வாதங்கள் வைக்கப்பட்டது. இவரை தொடர்ந்து கஸ்டடியில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ப.சிதம்பரம் வெளியே இருந்தால் அவர் சுலபமாக ஆதாரங்களை அழித்துவிடும் அபாயம் இருப்பதால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யும் வரை இந்த வழக்கின் விசாரணை தொடர்பான எந்த ஆதாரத்தையும் சிதம்பரம் தரப்பிற்கு வழங்க முடியாது என்று கடுமையாக ப.சிதம்பரத்தை சாடி அமலாக்கத்துறை சார்பில் வாதங்களை முன்வைக்கப்படுகின்றது.