சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது பேனர் விழுந்ததில் கீழே விழுந்த அவர் மீது லாரி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் பரிதாபமாக இறந்தார்.

அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபஸ்ரீ கனடா செல்வதற்காக தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.தமிழகத்தில் சாலை நடுவே பேனர்கள் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் தடைவிதித்து இருக்கின்ற நிலையில் பேனரால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.