கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் விஜயநிர்மலா காலமானார்..!!

இயக்குநரும், பழம்பெரும் நடிகையுமான விஜய நிர்மலா இன்று அதிகாலை காலமானார்.  

சென்னையை சேர்ந்த விஜயநிர்மலா (73) குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இவர் சிறுவயதில் (7) மச்சரேகை (1950) படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் எங்க வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞானஒளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா என்ற படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர்.  எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் உட்பட அப்போதைய கதாநாயகனுடன் நடித்துள்ளார்.

இவர் 44 படங்களை இயக்கியும், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடைத்துள்ளார். அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்று 2002-ல்  கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவர்  இடம்பிடித்துள்ளார். இவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நரேஷ் என்ற மகன் உள்ளார்.

இவர் தெலுங்கு சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார். விஜயநிர்மலா கிருஷ்ணமூர்த்தியை விவாகாரத்து செய்த பின், நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்ணா தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை ஆவார்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் வசித்து வந்த விஜயநிர்மலா நெஞ்சு வலி காரணமாக ஹைதராபாத் கச்சிபவுலியில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.