ஜிஎஸ்டி நாயகன்….”அருண் ஜெட்லி” ( 1952-2019) வரலாறு….!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

அருண் ஜெட்லி 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.இவரின் தந்தை மகாராஜ் கிஷன் ஜெட்லி தாய் ரத்தினம் பிரபாத் ஜெட்லி.இவர் தமது இளமைக் கல்வியை டெல்லியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பயின்றார்.இளங்கலை மற்றும் சட்டம் படித்த ஜெட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதும் மாணவர் தலைவராக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதால் 19 மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஊழலுக்கு எதிராக ஜெய்பிரகாஷ் நாராயணன் நடத்திய போராட்டத்தில் இளைஞர் பிரிவின் முக்கிய தலைவராக விளங்கினார்.அதைத்தொடர்ந்து ஜன சங்கத்தில் சேர்ந்து ஜெட்லி 1977 முதல் 1980 வரை டெல்லியில்ABVP தலைவராக இருந்தார்.பின்னர் உச்ச நீதிமன்றம் மற்றும் பல உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றினார்.1990 இல் டெல்லி உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து 1991 ஆம் ஆண்டு பாஜகவின் இணைந்த அருண் ஜெட்லி 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்தார்.2000-இல்  சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து விலகிய அவர் 2002 ஆம் ஆண்டு பாஜகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.2003 ஆம் ஆண்டு வணிக மற்றும் தொழில் துறை அமைச்சரானார்.பின்னர் 2009 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார்.  2014ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.ஆனாலும் பிரதமர் மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனைத் தொடர்ந்து சில காலம் பாதுகாப்பு துறையும் சேர்த்து கவனித்து வந்தார்.அருண்ஜெட்லி பதவிக் காலத்தின் போது தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி டெல்லி மருத்துவமனையில் கிட்னி மாற்று  அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.2019 ஜனவரியில் சில நாட்களில் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார்.

மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் 2019 பிப்ரவரியில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.  இதனால் பிரதமர் மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் அருண் ஜேட்லி இடம்பெறவில்லை.இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.