விஷவாயு கசிவு விவகாரம்: உரிய விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஷவாயு கசிவு ஏற்பட்ட தனியார் நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை விவகாரத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களை தாக்கிய கொடிய விஷவாயு:

நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷவாயு காரணமாக ஏராளமான கால்நடைகள் மரணம் அடைந்துள்ளன. விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது.

இதனால் ஆலையை சுற்றியுள்ள 10 கிராமங்களில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். காற்றில் கலந்து பரவிய விஷ வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விரைந்து ஆய்வு நடத்தினார்.

மேலும், விஷவாயு காரணமாக உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி நன்கொடை அறிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பதிலளிக்க ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், விஷவாயு காற்றில் கலந்தது தொடர்பாக பதிலளிக்கக் கோரி மத்திய அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *