சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ”மாபெரும் தமிழ் கனவு” என்னும் தலைப்பில் தமிழ் மரபு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். மேலும் ஒடிசா மாநில சிறப்பு ஆலோசகர் ஆர் பாலகிருஷ்ணன், தமிழ் இணைய கல்வி கழகத்தின் இயக்குனர் காந்தி, கல்லூரி நிர்வாக குழு தலைவர் வி எம் முரளிதரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, தமிழ் இனம் மிகவும் தொன்மையானது. தமிழினத்தின் தொன்மையை கீழடி அகழாய்வு மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழகம் கல்வி தரத்தில் முதலிடத்தில் இருக்கிறது. சுமார் 51.4 சதவீதம் பேர் தமிழகத்தில் உயர்கல்வி பயில்கின்றனர். ஹிந்தி மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவை திணிக்கப்படும் போது தான் பிரச்சனை தொடங்குகிறது. இந்நிலையில் தற்போது நடைபெறும் பொது தேர்வில் ஐம்பதாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அவர்கள் எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு சில நாட்கள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கும் கூட தேர்வு அனுமதி சீட்டை கொடுத்திருக்கின்றோம். மாணவர்கள் அனைவருக்கும் கல்வியை கொடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.