ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நூலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின் மழலை மாணவர்கள் முன்பு சிறிது நேரம் உரையாற்றினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக சிறு வயதிலேயே பல்வேறு பயிற்சிகளை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விரைவில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையாக நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் எந்தெந்த இடங்களில் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்பது ஆய்வு செய்யப்பட்டு அந்த பகுதியில் அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கே பணி வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.