மருத்துவர்கள் கோரிக்கை ”அரசு பரிசீலிக்கும்” அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் , மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவது அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் , கோரிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் நடத்திய மருத்துவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மருத்துவர்கள் பிரதிநிதிகள் , தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி மருத்துவக்கல்வி இயக்குனர் , சுகாதார துறை இயக்குனர் பங்கேற்ற்றனர்.6 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து எந்த வித  உடன்பாடும் எட்டாமல் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

 

இதை தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றார். தற்போது தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் மருத்துவக் கல்வி இயக்குநர், சுகாதார இயக்குநர் பங்கேற்ற்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் தமிழகத்தின் சுகாதாரத்துறை சாதனைக்கு மருத்துவர்களும், செவிலியர்களுமே காரணம். அரசு மருத்துவர்கள் வைத்துள்ள கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்தார். ஒரு வழியாக அரசு மருத்துவர்கள் போராட்டம் திரும்ப பெறப்பட்டதால் பாதிப்படைந்த நோயாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.