தமிழகத்தில் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இருக்கின்றது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நாடைபெற்று வருகின்றது.தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 முறை ஆலோசனை கூட்டம் நடத்திய தமிழக முதல்வர் 4ஆவது முறையாக ஆலோசித்து வருகின்றார்.
3 முறை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் மார்ச் 31வரை மூட வேண்டும் பல்வேறு உத்தரவுகளை ஆலோசனை கூட்டதில் தான் பிறப்பித்தார். அதே போல இந்த ஆலோசனை முடிந்தும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்க வாய்ப்புள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 2ஆகவும் , இன்று 3ஆகவும் உயர்ந்துள்ள நிலையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

அதேபோல நாளை பிரதமர் அனைத்து மாநில முதலமைச்சருடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றார். இதில் தமிழக முதலமைச்சரும் கலந்து கொண்டு மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து சொல்ல இருப்பதால் பல்வேறு முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட இருக்கின்றது.
பொதுவாக தமிழகத்தில் உள்ள 8ஆம் வகுப்பு வரை விடுமுறை விட்டாலும் மார்ச் 31 வரை தான் விடுமுறை உத்தரவு என்று உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அங்குள்ள 8ஆம் வகுப்பு வரை எல்லாரும் தேர்ச்சி என்று அறிவித்து , அடுத்த கல்வியாண்டுக்கு வந்தால் போதும் என்று உத்தரவிடப்பட்டதை போல தமிழகத்தில் அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் , கல்வியாளர்கள் , ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது நாடு முழுவதும் உள்ள கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சி பெற வைக்க வேண்டும். அப்படியான சூழலில் தான் தமிழகத்திலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறைப்படி உத்தரவை முதல்வர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஆலோசனைக்கு பிறகு தான் இது குறித்த தகவல் தெரியும் என்பதால் அனைத்து மாணவர்களும் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.