கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் தான் ஆர்ஆர்ஆர்.  இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. மேலும் இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர்,   பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு,  இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி  பட குழுவினருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “மிகச் சிறப்பான சாதனை. இசையமைப்பாளர் கீரவாணி, பாடகர்கள் ராகுல் சீப்லிகஞ்ச், காலா பைரவா, பிரேம் ரக்சித், ராஜமெளலி, ராம்சரண், ஜூனியா் என்.டி.ஆா் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். இந்த விருது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தியுள்ளது ” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் நடிகர் ரஜினி கூறியுள்ளதாவது, ‛‛எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும், இந்திய சினிமாவுக்கான கோல்டன் குளோப்பை கொண்டு வந்ததற்காகவும் கீரவாணி மற்றும் ராஜமவுலிக்கு நன்றி,” என பதிவிட்டுள்ளார். இதேப்போல் பல திரையுலக பிரபலங்கள் இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.