இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் உன்னாவ் பிரச்சனையை ஆரம்பம் முதல் சிபிஐ விசாரணை வரை முழு விவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
உத்திரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவால் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடைபெற்ற நிகழ்வுகள் திரைப்பட காட்சிகளுடன் கூட ஒப்பிட முடியாத அளவுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏராளமாக நடந்தது. குறிப்பாக பலாத்காரம், மிரட்டல், அடுத்தடுத்து கொலைகள், விபத்து, அரசியல் தலையீடு என சட்டவிரோத நிகழ்வுகள் அனைத்தும் இந்த குற்ற வழக்கில் இடம்பெற்றுள்ளன.

சிறுமி பாலியல் பலாத்காரம்:
டெல்லியில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள உன்னாவ் தோல் தொழிற்சாலைகள் நிறைந்த முக்கிய நகரம் முன்னாள் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் குல்தீப் சிங் செங்கர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி 17 வயது சிறுமி ஒருவர் வேலை தேடி எம்எல்ஏ குல்தீப் வீட்டிற்கு சென்றார். வேலை வாங்கித் தந்து சிறுமியை காப்பாற்ற வேண்டிய சட்ட மன்ற உறுப்பினர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.
முதல்வர் வீட்டு முன் தீக்குளிக்க முயற்சி:
இந்நிலையில் எம்எல்ஏ ஒருவரால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்த வழக்கு அப்போது பெரிய அளவில் வெளியுலகத்திற்கு தெரிய வில்லை. நியாயம் கேட்டு 17 வயது சிறுமியும், அவரது தந்தையும் காவல் நிலையங்களையும், நீதிமன்றங்களையும் நாடினார்கள். எந்தக் கதவும் அவர்களுக்காக திறக்கப்படவில்லை. வெறுத்துப் போன சிறுமி 2018ம் ஆண்டு ஏப்ரல் 8ம்தேதி தலைநகர் லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
மர்மமான முறையில் சிறுமி தந்தை மரணம்:
பின் பலத்த காயங்களுடன் அவர் காப்பாற்றப்பட்டார். சிறுமியை தீக்குளிக்க தூண்டியதாக கைது செய்யப்பட்ட அவருடைய தந்தை காவல் நிலையத்திலேயே மர்மமாக மரணம் அடைந்தார். இதையடுத்து சிறுமியின் தந்தை மர்மமாக மரணம் அடைந்த பிறகே வழக்கு தேசிய அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. இதை தொடர்ந்து வழக்கானது உத்திரப் பிரதேச மாநிலம் காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையின் அடிப்படியில் MLA குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சினிமா பானியில் கொலை முயற்சி:
இதையடுத்து விசாரணை எதிர்பார்த்த அளவு துரித வகையில் நடைபெறவில்லை. கடந்த வாரம் பாதிக்கப்பட்ட சிறுமி தனது உறவுக்காரப் பெண்கள், வழக்கறிஞர் உள்ளிட்டோருடன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து காரில் சென்று கொண்டிருந்த நிலையில், பதிவு எண் இல்லாத லாரி ஒன்று அவர்கள் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் சிறுமியின் உறவுக்காரப் பெண்கள் இருவர் சம்பவிடத்திலையே இறந்து போக சிறுமியும், வழக்கறிஞரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
உச்சநீதிமன்றம் தலையீடு:
இவ்விபத்து திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று புகார் எழுந்தது. பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ குல்தீப் சிங் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விபத்திற்கு முன்பே சிறுமி தனக்கு மிரட்டல்கள் வருவதாக கூறி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்த கடிதம் நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை. பாரதிய ஜனதாவால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி வழக்கைத் திசை திருப்பும் முயற்சிகள் நடந்து வருவதை அறிந்து உச்சநீதிமன்றமே இவ்வழக்கில் தலையீட்டு இருக்கிறது.
நீதிக்கான எதிர்பார்ப்பில் இந்தியா:
வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த வழக்கை 45 நாளில் முடிக்க உத்தரவிட்டிருக்கிறார். சினிமாவை மிஞ்சும் அளவிற்கு உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் ஒரு ஏழை சிறுமிக்கு அத்தனை இன்னல்கள் நடந்திருப்பது கொடுமையின் உச்சம். பணம், செல்வாக்கால் எதையும் சாதித்து விடலாம் என்று நினைப்போருக்கு உன்னாவ் குற்றத்தில் கிடைக்கும் நீதியே பதிலாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.