“நான் கிரிக்கெட்டைப் பற்றி சிந்திக்கவில்லை”… மக்களை விட அது பெரிது கிடையாது… கவலையில் ஹர்பஜன்!

கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நான் கிரிக்கெட்டைப் பற்றி துளியும் யோசிக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியிருக்கின்றனர். இதனால் உலகில் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

அந்தவகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், கடந்த 24ஆம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதற்கு முன்னதாக ஐ.பி.எல் தொடரின் 13ஆவது சீசனை ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்க இந்திய கிரிக்கெட் வாரியமும் (பிசிசிஐ) உத்தரவிட்டது. இதனால் ஐபிஎல் போட்டி நடக்குமா ? நடக்காதா? என்ற இரட்டை நிலைப்பாடே நிலவுகிறது. அநேகமாக ஐபிஎல் நடக்க வாய்ப்பு இல்லை என்று தான் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது ஐபிஎல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

“கடந்த 15 நாள்களாக நான் கிரிக்கெட்டைப் பற்றி துளியும் சிந்திக்கவில்லை. நாட்டு மக்களைவிட கிரிக்கெட் ஒன்றும் பெரிதானது கிடையாது. நான் தற்போது ஐபில் அல்லது கிரிக்கெட்டைப் பற்றி சிந்தித்து கொண்டிருந்தால் நான் சுயநலவாதியாகத்தான் இருப்பேன்.

எப்போதும் என்னுடைய முன்னுரிமை ஆரோக்கியத்திற்குத்தான். நாம் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் மட்டுமே விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். தற்போதைய நிலையில் கிரிக்கெட் என் எண்ணங்களில் கூட கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ஹர்பஜன், “ஊரடங்கு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலமையை  நாம் சிந்தித்திருக்க வேண்டும். தற்போது அவர்கள் தங்குவதற்கு இடம், சாப்பாடு, வேலை என அனைத்தையும் இழந்து நிற்கின்றனர்.

அரசு அவர்களுக்கு பணம், சாப்பாடு ஆகியவை கிடைக்கும் என உறுதியளித்திருக்க வேண்டும். ஆனால் தற்போது தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் போக முடியாமல் தவித்துவருகின்றனர். இப்படியான விஷயங்கள் எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 86 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 26 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *