மாணவி தற்கொலையில் தொடர்புடையவர்கள் நீதிமுன் நிறுத்த தடயவியல் இயக்குநர் உதவி – அப்துல் லத்தீப்

மாணவி தற்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிக்கு முன் நிற்க வைப்போம் என தடயவியல் துறை இயக்குநர் உறுதியளித்துள்ளதாக பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமாவின் அலைபேசி கடவுச் சொல்லை மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் தடயவியல் நிபுணர்களிடம் பதிந்து கொடுத்தார்.சென்னை ஐ.ஐ.டி விடுதி அறையில் கடந்த 8 ஆம் தேதி இரவு முதுகலை மனிதநேயம் (Humanities) முதலாம் ஆண்டு பயிலும் மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பாத்திமாவின் அலைபேசி பதிவுகளை வைத்து மாணவியின் தற்கொலைக்கு ஐ.ஐ.டி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட சிலர்தான் காரணமென பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் பேராசிரியர்கள் 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டு இந்த வழக்கு மத்திய குற்றபிரிவுக்கு மாற்றப்பட்டு பேராசிரியர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கு முக்கிய ஆதாரங்களாக மாணவி பாத்திமா தனது அலைபேசி மற்றும் டாபில் பதிந்து வைத்துள்ள வாக்குமூலங்கள் பெற்றோர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற சம்மனின் அடிப்படையில் பாத்திமாவின் அலைபேசியில் உள்ள கடவுச் சொல்லை பதிந்து கொடுப்பதற்காக தடயவியல் அலுவலகத்திற்கு பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் மற்றும் தங்கை ஆயிஷா லத்தீப் ஆகியோர் வந்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அப்துல் லத்தீப், நீதிமன்ற உத்தரவின்படி தடயவியல் நிபுணர்களிடம் பாத்திமாவின் அலைபேசியில் உள்ள கடவுச் சொல்லை பதிந்து கொடுத்துள்ளதாகவும், அதனை முழுவதும் பரிசோதித்த பின்னர் உண்மைத் தன்மையை கண்டறிந்து குற்றவாளிகளை நீதிக்கு முன் நிற்கவைப்போம் என தடயவியல் இயக்குநர் தங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் எழுத்துபூர்வமாகவும் இங்கு நடந்தவற்றை எழுதி கையொப்பம் இட்டு தங்களிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்சர மூர்த்தியை சந்தித்து பேசவுள்ளதாகக் கூறிய அவர், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவரது வழிகாட்டுதலின்படி நடக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், முதல்வர் தற்போது சென்னையில் இல்லாததால் அவரை சந்திக்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை எனவும் நேரம் கிடைத்தால் அவரை சந்திப்போம் எனவும் கூறினார். தொடர்ந்து, பிரதமரை சந்திக்கும் நேரம் குறித்து இன்று இரவு 8 மணியளவில் தெரியவரும் என்பதால் அதன் பின்னர் அதுபற்றி முடிவு செய்யவுள்ளதாகவும் அப்துல் லத்தீப் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *