திருமணத்திற்கு முதல்நாள் படுத்த படுக்கையான மணப்பெண்… மணமகன் எடுத்த திடீர் முடிவு..!!

திருமணத்திற்கு முந்தைய நாள் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து படுத்த படுக்கையான மணப்பெண்ணுக்கு மணமகன் குறித்த நேரத்தில் தாலிகட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த அவதேஷ் என்ற என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக முதல்நாள் மணக்கோலத்தில் ஆர்த்தி கிளம்பி கொண்டிருக்கும்போது ஒரு குழந்தை மாடியில் இருந்து கீழே விழ நேர்ந்தது. அந்த குழந்தையை காப்பாற்றும் பொழுது மணப்பெண் மாடிப்படியிலிருந்து தடுக்கி கீழே விழுந்தார். பின்னர் இவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் முதுகெலும்பு அதிகம் பாதிக்கப் பட்டுள்ளதால் சில மாதங்களுக்கு படுத்த படுக்கையாக தான் இருப்பார் என்றும், காயங்கள் ஆறிய பிறகு எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும் என்று கூறினர். முதுகெலும்பு சரியாகவில்லை என்றால் அவர் படுத்த படுக்கையாக தான் இருக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். இந்த செய்தி மணமகன் வீட்டாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மிகுந்த வேதனையிலிருந்த ஆர்த்தியின் பெற்றோர் குறித்த நேரத்தில் ஆர்த்தியின் தங்கையை மணமகனுக்கு திருமணம் முடித்து தருவதாக கூறினார். ஆனால் மணமகன் எடுத்த முடிவு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர் குறித்த நேரத்தில் மருத்துவமனையில் அனைவரின் முன்னிலையிலும் ஆர்த்திக்கு தாலி கட்டினார். “திருமணம் செய்ய முடிவு செய்த போதே ஆர்த்தியை தான் மனைவியாக நினைத்து விட்டதாகவும், அவர் எந்த நிலையில் இருந்தாலும் அவரை நான் கைவிடமாட்டேன்” என்றும் கூறினார். அதன்பிறகு ஆர்த்திக்கு நடந்த அறுவை சிகிச்சையிலும் கணவர் என்று கையெழுத்துப் போட்டார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானது. அனைவரும் ஆர்த்தி குணமடைந்து கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.