உலகம் முழுவதும் ஏதாவது ஒரு பகுதிகளில் சாலை விபத்து தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் பலரும் உயிரிழக்கத்தான் செய்கின்றனர். சாலை விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இந்த சோக சம்பவம் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், அசாம் மாநிலம் உடல்குரி மாவட்டம் (Udalguri) நசான்சலி பகுதியில், திருமண கோஷ்டியினருடன் சென்ற வேன் ஓன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பின் சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேன் மிக கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 24 பேரும் மங்கல்டாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில், பலத்த காயமடைந்த 14 பேரின் நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கவுகாத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருமணமான புதுப்பெண்ணை புகுந்த வீட்டில் விட்டுவிட்டு உறவினர்கள் அனைவரும் வீடு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனோவல் இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.