மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ரூ 50,00,000 மருத்துவ காப்பீடு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மருத்துவ பணியாளர்களுக்கு ரூ 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு  செய்யப்படும் என்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு  செய்யப்பட்டும். கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் வெள்ளை நிற உடை அணிந்த கடவுளாக பார்க்கப்படுகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவின்றி தவிக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தரப்படும் ரூ.6 ஆயிரத்தில் ரூ.2 ஆயிரம் முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்கப்படும். 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாதத்துக்கு கூடுதலாக வழங்கப்படும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.  8.69 கோடி மக்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும்.

விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும். முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000  இரண்டு தவணைகளாக 3 மாதங்களுக்கு வழங்கப்படும். 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும்

விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர். 100 பேருக்கு குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனம், ஊழியர்கள் 3 மாதத்துக்கு பி.எப். கட்ட தேவையில்லை, மாத ஊதியம் 15 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே சலுகை பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *