இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓட்டேரி தெருவில் சாமுவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாரத் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் பாரத் தரப்பை சேர்ந்த ஆதரவாளர்களும், சாமுவேல் தரப்பை சேர்ந்த பிரிவினரும் ஒருவரை ஒருவர் கம்பி, தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியை போர்க்களமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும் முடியவில்லை. எனவே காவல்துறையினர் இரு பிரிவினரையும் விரட்டி அடித்ததால் நாலாபக்கமும் அனைவரும் சிதறி ஓடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து சாமுவேலின் சகோதரர் அகத்தியன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஐயப்பன், வசந்த், சேகர், வசந்த், ஜீவானந்தம் உள்பட 50 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல் பாரத் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் விஜய், கணேசன் உள்பட 50 பேர் மீது 7 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே அங்கு 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.