இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2 ,000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவற்றில் குறிப்பாக தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டியாக ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, நியூசிலாந்தின் மெக் ஹெசன் மற்றும் இந்தியாவின் லால்சந்த் ராஜ்புட், ராபின் சிங் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். அதே போல் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தென்னாப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பதவிக்கு தகுதியான நபர்களை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான கபில்தேவ், அன்ஷூமன் கெயிவாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை வருகின்ற ஆகஸ்ட் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் தேர்வு செய்ய இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.