தாமதப்படுத்திய பள்ளி நிர்வாகம்…. தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

மாற்று சான்றிதழ் தருவதற்கு தாமதப்படுத்திய தனியார் பள்ளியின் முன்பு குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் சமையல் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் திருவொற்றியூர் பூந்தோட்டம் சாலையில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கோரானா ஊரடங்கு கால கட்டத்தில் மகனின் படிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் ராஜா சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் தீபக்கின் மாற்று சான்றிதழ் வாங்கி அவரை அரசு பள்ளியில் சேர்க்க ராஜா முடிவெடுத்துள்ளார். இதற்காக ராஜா அந்த தனியார் பள்ளிக்கு சென்று தனது மகனின் மாற்றுச் சான்றிதழை கேட்டுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் மாற்று சான்றிதழ் தராமல் காலம் தாழ்த்தியுள்ளது.

இதனால் கோபமடைந்த ராஜா தனது மனைவி மற்றும் மகன் தீபக் போன்றோருடன் தனியார் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி நிர்வாகத்தினரிடம் பேசியுள்ளனர். அப்போது ஒரு வாரத்திற்குள் தீபக்கின் மாற்று சான்றிதழ் தரப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ராஜா மற்றும் தீபக் போன்றோரை ஜெய்பால் கரோடியா அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்று நடந்தவற்றை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உதவி தலைமை ஆசிரியரான ரகு என்பவர் தீபக்கை ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *