உங்கள் கடையின் தரை அழுக்காக உள்ளது….!! ஹோட்டல் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி போல நடித்து ஹோட்டலில் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டா பேருந்து நிலையம் அருகே பாபுபாய் என்பவர் ஹோட்டல் மற்றும் டீக்கடை நடத்தி வருகின்றார். இவருடைய ஹோட்டலுக்கு இரவு 10.45 மணிக்கு டிப்டாப் உடையுடன் ஒருவர் நுழைந்துள்ளார். அந்த நபர் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்ணிடம் இரவு 10.45 மணி வரை ஏன் கடை நடத்தி வருகிறார்கள் என்றும், தரை முழுவதும் அழுக்குப் படிந்து உள்ளதால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டியுள்ளார். உடனே அந்த பெண் ஊழியர் ஹோட்டல் உரிமையாளரான பாபுபாயிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் பாபுபாய் அந்த டிப்டாப் நபரிடம் நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் நான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று கூறியுள்ளார்.

ஆனால் பாபுபாய் அதனை நம்பாமல் எனக்கு உணவு பாதுகாப்பு அதிகாரியை நன்றாகவே தெரியும், நேற்று தான் என்னுடைய கடைக்கு வந்து சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த டிப்டாப் நபர் ரூபாய் 5 ஆயிரம் தராவிட்டால் உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாபுபாய் மிரட்டியுள்ளார். எனவே ஓட்டல் உரிமையாளருக்கும் அந்த டிப்டாப் நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் அந்த டிப்டாப் நபரை கையும் களவுமாக பிடித்து பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து பாபு பாய் பள்ளி கொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிப்டாப் நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *