“உங்களுக்கு டேட் முடிஞ்சிடுச்சு” அத்துமீறி இயங்கி வந்த பேக்கரி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேம்பாரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது வேம்பார் பகுதியிலுள்ள ஒரு பேக்கரியில் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியான பிறகும் தொடர்ந்து இயங்கி வருவது கண்டறியப்பட்டது. அதுமட்டுமில்லாது அந்த பேக்கரியில் உரிய லேபிள் விவரங்கள் எதுவுமின்றி ரொட்டி, சேவு உள்ளிட்ட 30 கிலோ பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

எனவே அதிகாரிகள் அந்த உணவுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அப்பேக்கரில் பொதுமக்களின் பொது சுகாதார நலனுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அதீத சுகாதார குறைபாடுகள் காணப்பட்டது. எனவே பேக்கரியை அதிகாரிகள் உடனே மூடி சீல் வைத்துள்ளனர். இதைப் போலவே அப்பகுதியில் காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கி வந்த மளிகை கடையும் மூடப்பட்டது.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரியும் உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக உரிமத்தை பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.