கடிதம் எழுதி வைத்து விட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மகாராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் என்ஜினீயரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி தனது மனைவியை விட்டு பிரிந்து தந்தை பொன்னையா உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பொன்னையா வேலைக்கு சென்று விட்டார். ஆனால் மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் பொன்னையா வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொன்னையா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது அதில் கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.