“வரவை விட 430 சதவீதம் அதிகமான சொத்து” சோதனையில் சிக்கிய செயற்பொறியாளர் சோபனா….!!!

வரவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வேலூர் தொழில்நுட்ப கல்வி அலுவலகம் அப்பகுதியில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது. இதன் கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் உட்பட 9 மாவட்டங்கள் உள்ளன. இதன் செயற்பொறியாளராக சோபனா என்பவர் கடந்த ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் அரசு கல்லூரிகளில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். இதில் சோபனா கட்டட ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுவதாக புகார்கள் சென்றன. எனவே லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் அவரது காரிலிருந்து ரூபாய் 5 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதனை அடுத்து சோபனா தங்கியிருந்த குடியிருப்பு மற்றும் அவரது சொந்த ஊரிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் அவரிடமிருந்து ரூபாய் 2 கோடிக்கு மேல் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே காவல்துறையினர் அவரது வங்கி கணக்கு புத்தகங்கள், லாக்கர் சாவி ஆகியவற்றையும் பறிமுதல் செய்ததோடு வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் திருச்சி மாவட்ட பொதுப்பணி துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துணை கண்காணிப்பு பொறியாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பணியில் சேராமல் இருந்துள்ளார். எனவே லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். பின்னர் காவல்துறையினர் அவரை வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோபனா மற்றும் அவருடைய கணவர் நந்தகுமாரின் பெயரிலான வங்கி கணக்குகள், வரவு -செலவுகள், அசையும், அசையா சொத்துகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டதில் அவர்களுடைய வருமானம் ரூ 42 லட்சத்து 60 ஆயிரத்து 828 ஆகும். ஆனால் அவர்களின் வருமானத்தைவிட ரூபாய் 2 கோடியே 65 லட்சத்து 96 ஆயிரத்து 470 அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது தெரிய வந்தது. இது இருவரின் வருமானத்தை விடவும் 430 சதவீதம் அதிகமாகும். எனவே அவர்கள் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் இருவரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *