“என் கூட சேர்த்து வைங்க” பதற வைத்த தொழிலாளி…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கூலித்தொழிலாளி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வள்ளியம்மாள்புரம் பகுதியில் கூலித் தொழிலாளியான லிங்கத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே லிங்கத்துரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் லிங்கத்துரை தினமும் மது குடித்து விட்டுச் சென்று தனது மனைவியான பானுமதியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் பானுமதி தனது கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னுடன் தகராறு செய்வதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லிங்கத்துரையை அழைத்து அறிவுரை கூறி தனது மனைவியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் லிங்கத்துரை மீண்டும் மதுவை  குடித்துவிட்டு சென்று தனது மனைவியிடம் தகராறு செய்த போது பானுமதி இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது என்று அவரை திட்டி, துரத்திவிட்டார். இதனால் மனமுடைந்த லிங்கத்துரை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரின் புகாரை ஏற்க மறுத்ததால் லிங்கத்துரை அப்பகுதியில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று இங்க இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று அவரை கீழே இறங்கி வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த மண்டல துணை தாசில்தார் ராஜேஸ்வரி, காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்போன் கோபுரத்தின் மேலே இருந்த லிங்கத்துரையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது லிங்கத்துரை தன்னை தனது மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார். அவ்வாறு தன்னை தனது மனைவியுடன் சேர்க்க வைக்க வில்லையேன்றால் நான் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனைக் கேட்ட அதிகாரிகள் உடனடியாக லிங்கத் துரையிடம் உங்களை மனைவியுடன் சேர்த்து வைக்கிறோம் என்று சமாதானம் பேசி அவரைக் கீழே இறங்கி வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து லிங்கத் துரை சிறிது நேரம் கழித்து மேலே இருந்து கீழே இறங்கி வரமுடியாமல் தவித்துள்ளார். இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அவரை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு சென்று அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் லிங்கத்துரையை  அவரின் மனைவியான பானுமதியிடம் சேர்த்து வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி அவரை சேர்த்து  வைத்துள்ளனர்.