ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல – டிடிவி தினகரன்!

நெருக்கடியான நேரத்தில் சரண் விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு உள்ளிட்ட அரசு நடவடிக்கைக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

ஈட்டிய விடுப்புக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையும் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் அறிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு நடைமுறை ஏப்., 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு ஜாக்டோ – ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நெருக்கடியான நேரத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டியவிடுப்பை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *