பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி.. அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்…!!!!!!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை கண்காணிப்பாளர் அறை முன்பாக அமர்ந்து நேற்று காலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டு சம்பளம் வழங்க வேண்டும். அதேபோல் பழிவாங்கும் நோக்கத்தில் தூய்மை பணியாளர்களை ஒப்பந்த நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.

அதனை திரும்ப பெற வேண்டும். மேலும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களை மற்ற பணிகளை செய்ய வற்புறுத்த கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இது குறித்து  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களுடன்  பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அதில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நீடித்துள்ளது. இதன் காரணமாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.