பாரிஸின் முக்கிய சுற்றுலா தலமான உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் கொரோனா அச்சத்தின் காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க, உலகில் இருக்கும் பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், ஆண்டு தோறும் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் இருக்கும் ஈபிள் டவரும் கொரோனா எதிரொலியால் மூடப்படுவதாக, அதனை பராமரித்து வரும் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஈபிள் டவரை பார்த்து ரசிப்பதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்த மக்களுக்கான பணத்தை திருப்பி அளிப்பது தொடர்பாக இதுவரை எந்தஒரு அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.