கொரோனா அச்சம்… இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு!

கொரோனா அச்சம் காரணமாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பில், நாடு முழுவதிலுமான காவல்துறை ஊரடங்கு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாகவும், வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த சமயத்தில் பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்  என்றும், கட்டுநாயகே விமான நிலையம் செல்வோருக்கு விமான டிக்கெட் பெர்மிட்டாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை கொரோனா வைரசால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.