நீரில் மூழ்கிய நண்பனை மீட்டு நீரில் மூழ்கிய நபர் – ஆத்தூரில் ஆற்றில் சோகம் ..!!

நண்பனை காப்பாற்ற சென்று வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கண்ணிராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அந்தோணி சுமார் 150 பேருடன் திருச்செந்தூருக்கு பாத யாத்திரை புறப்பட்டு வந்துள்ளனர். மாரிமுத்து மாற்றுத்திறனாளி ஆவர் எனவே அவர் அவரது மூன்று சக்கர சைக்கிளை ஓட்டியபடி பாதையாத்திரை வந்தவர்களுடன் வந்துள்ளார்.

நேற்று ஆத்தூர் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றின் தென்புற படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர். மாரிமுத்து படித்துறையில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த ஆழமான பகுதியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார்.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தோணி தண்ணீரில் குதித்து மாரிமுத்துவை காப்பாற்றி கரை சேர்த்துள்ளார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அந்தோணி நீரில் மூழ்கியுள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் நீரில் அந்தோணியை  தேடியுள்ளனர். ஆனால் அந்தோணி கிடைக்காத காரணத்தினால் ஆத்தூர் காவல் நிலையம், திருச்செந்தூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடியுள்ளனர்.

பின்னர் நீரில் மூழ்கி இறந்த அந்தோணியின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தண்ணீரில் மூழ்கிய மாரிமுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *