எம்-சாண்ட் சிமெண்டிற்குள் சிக்கி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள சிங்காரம் பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு லாரி ஓட்டுநரான ஞானசேகரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஞானசேகரன் தனது மைத்துனரான விக்னேஷ் உடன் லாரியில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள கல்குவாரியில் எம்-சாண்ட் லோடு ஏற்றுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது நள்ளிரவில் லாரியின் உள் பகுதியில் உள்ள துவாரங்கள் வழியாக சாலையில் எம்-சாண்ட் சிதறாமல் இருக்க அவற்றை அடைத்து கொண்டிருந்தார். இந்நிலையில் கல்குவாரியிலிருந்த ஆப்பரேட்டரான சுரேஷ்பாபு லாரிக்குள் ஓட்டுனர் ஞானசேகரன் இருப்பதை கவனிக்காமல் பொக்லைன் மூலம் எம்-சாண்ட் மணலை கொட்டினார். இதில் ஞானசேகரன் மூச்சுத்திணறி லாரிகுள்ளேயே இறந்து விட்டார். அதன் பின் ஆப்பரேட்டர் சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து ஞானசேகரின் மனைவி தூசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆப்பரேட்டர் சுரேஷ் பாபுவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் ஞானசேகருக்கும், ராஜேஸ்வரிக்கும் கடந்த 1ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்று அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.