ராணுவ வீரரின் வரதட்சனை கொடுமை… தாங்க முடியாத மனைவி… வாடிப்பட்டி அருகே நடந்த சோகம்..!!

ராணுவ வீரர், மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதற்காக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நகரி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகள் நந்தினிக்கும், அதே பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணிபுரியும் அருண் பாண்டியருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணப்பெண்ணிற்கு 5 சவரன் நகையும் 2.5 லட்சம் மதிப்பிலான வரதட்சனை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கூடுதலான வரதட்சனை கொடுக்க வேண்டும் என்று அருண்பாண்டியனின் குடும்பத்தினர் நந்தினியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அருண்பாண்டியனின் தாய் அல்லிராணி, தந்தை பாண்டியன் ஆகியோர் நந்தினியின் சகோதரிகள் பிரியங்கா, இலக்கியா தகாத வார்த்தைகளால் கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணமாகி ஒரு மாதத்திலேயே கணவர் பணி நிமிர்த்தமாக டெல்லிக்கு சென்றுவிட்டார். திருமணமான ஒரு மாதத்தில் பணிக்குச் சென்ற அருண்பாண்டியன் மீதி வரதட்சணை பணத்தை கொடுத்தால் மட்டுமே தான் திரும்பி வருவேன் என்றும், உன்னுடன் வாழ்வேன்  என்றும் கூறியுள்ளார்.

இதனால் திருமணமான ஒரு மாதத்திலேயே தன்னுடைய பிறந்த வீட்டிற்கு சென்ற நந்தினி 8 மாதங்களுக்கு முன்பாகவே வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மாலை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்கச் சென்ற போது வாடிப்பட்டி காவல் நிலைய பெண் ஆய்வாளர் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், நந்தினியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த நந்தினி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் அவரை மீட்டு குடும்பத்தினர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையின்போது நந்தினி
பேசிய காணொளியில் தனது கணவன் மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *