நடிகர் ரஜினிகாந்த் ஊரடங்கு குறித்து வெளியிட்ட வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
நாடு முழுவதும் நாளை நடைபெற இருக்கும் சுய ஊரடங்கு உத்தரவை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் : கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது ஸ்டேஜில் உள்ளது.அது மூன்றாவது ஸ்டேஜிக்கு போய்விடக்கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே மூன்றாவது ஸ்டேஜுக்கு போகாமல் தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கொடுத்துள்ளார்.

இதே மாதிரி இத்தாலில் நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது ஸ்டேஜில் இருக்கும்போது அந்த அரசாங்கம் மக்களை எச்சரித்தது. ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு கொடுத்தது. ஆனால் மக்கள் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை , உதாசீனப் படுத்தி விட்டார்கள். அதனால் பல ஆயிரம் உயிர்கள் பலி ஆகியது. அதே நிலைமை இந்தியாவில் நிகழ்ந்து விடக்கூடாது.
ஆகவே எல்லோரும் இளைஞர்கள் , பெரியவர்கள் 22ஆம் தேதி அந்த ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க , அதை தடுப்பதற்கு மருத்துவர்கள் , செவிலியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். அவர்களை பிரதமர் சொன்ன மாதிரி 5 மணிக்கு மனதார பாராட்டுவோம் என்று வேண்டுகோள் விடுத்து ரஜினி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ரஜினி வெளியிட்ட வீடியோ ட்விட்டரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தங்களது விதிமுறைக்கு எதிரானது எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் ரஜினி வீடியோவை நீக்கியுள்ளது. #CoronaVirus 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் 3வது நிலையை தவிர்க்கலாம் என ரஜினி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.