நோ… நோ…. ”தெறித்து ஓடும் மாணவர்கள்” நீட் எண்ணிக்கை குறைந்தது …!!

நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் ஆண்டுதோறும் உயர்ந்ததால், இந்த ஆண்டு அத்தேர்விற்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 2ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி இரவு 11.50 மணிவரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை நீட் தேர்விற்கு விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்தியவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் மகாராஷ்டிராவிலிருந்து 2 லட்சத்து 28 ஆயிரத்து 829 மாணவர்களும், உத்தரப் பிரதேசத்திலிருந்து 1 லட்சத்து 54 ஆயிரத்து 705 மாணவர்களும், ராஜஸ்தானிலிருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 மாணவர்களும், கர்நாடகாவிலிருந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 629 மாணவர்களும், தமிழ்நாட்டிலிருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 502 மாணவர்களும், கேரளாவிலிருந்து 1 லட்சத்து 16 ஆயிரத்து 10 மாணவர்களும் என மொத்தம் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

2020ஆம் ஆண்டுக்கான நீட் தகுதித் தேர்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 997 பேர் பதிவு செய்திருந்தனர். தேர்வு எழுதியவர்களில் 59 ஆயிரத்து 785 பேர் தகுதி பெற்றனர். ஆனால், 2018ஆம் ஆண்டில் இந்திய அளவில் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவர்களும், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்களும் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தனர். அதில் தமிழ்நாட்டிலிருந்து 39.56 சதவீதம் பேர் மட்டுமே தகுதி பெற்றனர்.

நீட் தேர்வினை எழுதிய மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் பெற்றதாலும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் விண்ணப்பித்து அதிக மதிப்பெண் பெற்றதாலும் இந்த ஆண்டு படிக்கும் மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்கவில்லை.

எம்.பி.பி.எஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான மதிப்பெண் உயர்வதாலும் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்கவில்லை. 2019ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதி 4 ஆயிரத்து 202 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். அதில் 70 சதவீதம் பேர், அதாவது 2 ஆயிரத்து 916 மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *