திமுக வெற்றிக்கு ”ரூ 1,25,00,00,000 செலவு” அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு …!!

8000 வாக்குகளை வாங்க திமுக ரூ 125 கோடி செலவு செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும்  , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக_வின் வெற்றி குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் , வேலூர் தேர்தலில் 8000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள திமுக இந்த வாக்கை வாங்க 125 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள். திமுக வெற்றி பெற்றது மோசமான வெற்றி , மோசடியான வெற்றி. எங்களை பொறுத்தவரை மக்கள் மனதில்  நாங்கள் முழுதாக  இடம்பெற்றுள்ளோம். பாராளுமன்ற தேர்தல் முடிந்த சில காலத்தில் இந்த மாற்றம் திமுக_வுக்கு  தேய் பிறையாக தான் போய் கொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு வளர்பிறையாக இருக்கின்றது. நிச்சயமாக 2021  எங்களின் வெற்றி அமையும்.