பேரிடராக அறிவிங்க …. நிதி போதாது…. தனித்திரு, விழித்திரு – முக.ஸ்டாலின் வேண்டுகோள் ..!!

கொரோனா வைரசால் தமிழகத்தில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முக.ஸ்டாலின் பல்வேறு வேண்டுகோளை வைத்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் , உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸால் தினசரி கொத்து கொத்தாக மனித உயிர்களை இழந்து கொண்டிருக்கின்றோம். நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்திய பிரதமர் மோடியின் உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்த சலுகைகள் திட்டங்களை வரவேற்கின்ற அதே சூழ்நிலையில் இவை போதுமானதல்ல. தொழிலாளர்கள், சிறு வணிகர்களால் மூன்று வாரகாலஇழப்பை நிச்சயமாக தாங்க முடியாது.

இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கின்ற சோதனையை சுகாதார பேரிடராக மட்டுமின்றி, பொருளாதார பேரிடராகவும் கருதி மத்திய மாநில அரசுகள் செயல்படவேண்டும். இலவச உணவு, மளிகை பொருட்கள், அன்றாட ஊதியம், உதவித்தொகைகள், வரிவிலக்கு, மானியங்கள், கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் ஆகியவற்றுக்காக ஒரு பெரும் தொகையை மத்திய மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாநில அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் போதுமானதல்ல. நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், கட்டட தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிற ஆயிரம் ரூபாயை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை ஊழியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியல.

உங்களது பணி என்பது எல்லையை காக்கும் ராணுவ வீரர்களைப் போல மிகவும் மகத்தானது. நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்ற உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதையும் எதிர்கொள்ளும் வல்லமை நம்முடைய அறிவியலுக்கும் உண்டு. உடலுக்கும் உள்ளத்துக்கும் உண்டு என்ற நம்பிக்கையுடன் தனித்திருப்போம் விழித்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *