இயக்குனர் வெற்றிமாறன் ஒரு சிறந்த பேராசிரியர்… புகழ்ந்து தள்ளிய திருமா… எதற்காக தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள விடுதலை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் மக்களையும் இயற்கை வளத்தையும் பாதுகாக்க போராடும் குழுவுக்கும், காவல்துறைக்கும் இடையேயான பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் பலரின் பாராட்டுகளையும் பெற்று வரும் நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் படத்தை பாராட்டி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் நான் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தை பார்த்தேன். அரசு அதிகாரம் ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றிற்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் தெளிவாக இருக்கிறது. அரசு என்றால் அதிகாரம். அதிகாரம் என்றால் ஆயுதம். ஆயுதம் என்றால் ஆணவம். ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியை சுவைக்கும் கொடூரமான அடக்கு முறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது. வெற்றிமாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி ஒரு சிறந்த பேராசிரியராகவும் திகழ்கிறார். மேலும் வழக்கம் போல் இது வெற்றிமாறனின் படைப்பு என்று முத்திரை பதித்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.