தாய்த்திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில் இந்தியர்கள் அனைவருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சுதந்திர தின நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்
இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 73-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திரதின விழாவுக்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நாட்டு மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திரதின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து நம் தாய்த்திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில் இந்தியர்கள் அனைவருக்கும் #சுதந்திரதினம் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இத்தினத்தில் சுதந்திரவேள்வியில் இன்னுயிர்நீத்த தியாகசீலர்களின் நாட்டு பற்றையும் தியாக உணர்வையும் போற்றி வணங்குவோம்.
இச்சுதந்திர தின திருநாளில் நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்து தாய்த்திரு நாட்டை வளமாக்கவும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்குவதற்காகவும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செய்த சாதனைகளை மனதில் நிறுத்தி,சாதி மத வேறுபாடுகள் நீங்கி சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கவும் ஒற்றுமையுடன் பாடுபடுவோம் என உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.