“பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி” ட்விட்டரில் வாழ்த்திய ராஜ்நாத்சிங்..!!

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியா போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 336 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி 140 ரன்கள் குவித்தார். மேலும் கோலி 77, ரன்களும்,  கேஎல் ராகுல் 57 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் முகமது அமீர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான் 62 ரன்களும், பாபர் ஆசம் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் தடுமாறியது. 35 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை வந்ததால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு 302 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன் பிறகு இமாத் வாசிம் 46 ரன்களும், ஷதாப் கான் 20 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் 40 ஓவரில் 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் 7 முறை விளையாடி, அனைத்திலும்  வென்று சாதனையை தக்க வைத்துள்ளது.இந்திய அணியின் இந்த வெற்றியை ரசிகர்கள் இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்திய அணி அற்புதமாக கிரிக்கெட் போட்டியினை விளையாடி வெற்றி பெற்றுள்ளது. டீம் இந்தியாவை நினைத்து அனைவரும் பெருமைப்படுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.