நீர்வீழ்ச்சி குட்டையில் மூழ்கி துணை தாசில்தார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் தாலுக்கா அலுவலகத்தில் துணை தாசில்தாராக சுந்தர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவரது நண்பர்களுடன் கல்வராயன் மலைக்கு சென்று அப்பகுதிகளை சுற்றிப் பார்த்துள்ளார். பின்னர் கவியம் நீர் வீட்டிற்கு சென்ற சுந்தர் அவரது நண்பர்களுடன் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சி அருகில் உள்ள குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்து பலியான சுந்தரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.