கொரோனா எதிரொலி : தஞ்சை பெரிய கோயிலை மூட உத்தரவு – சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக தஞ்சை பெரியகோயிலை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸால் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற கோயில்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பெரும்பாலான கோயில்களில் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் சில கோயில்களை மூடவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் மார்ச் 31ம் தேதி வரை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், தஞ்சை பெரிய கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 வரை பக்தர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களை மூட மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் உத்தரவை அடுத்து தஞ்சை பெரிய கோயிலில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.